முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கணவன் ஏழு வருஷம் காணாமல் போனால் அவரை செத்தவராகக் கருதலாமா..?

Subbiahpatturajan

கணவன் ஏழு வருடங்கள் காணாமல் போனால் அவரை இறந்தவராக கருதலாமா..?

கணவன் ஏழு வருஷம் காணாமல் போனால் அவரை செத்தவராகக் கருதலாமா..?

*கணவன் உயிரோடு இருக்கும் போது!*

கணவர் உயிரோடு இருக்கும்போது விதவை பென்ஷன் வாங்கியதோடு அதற்கு நியாயம் கேட்ட பெண்!

தலைசிறந்த இயக்குனரும்,  ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஞான  ராஜசேகரன்  தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வருகிறார்.. அதில் இருந்து சில பகுதிகளை முக நூலிலும் தந்து வருகிறார். சமீபத்திய பதிவு இது...

அணுகுமுறை வித்தியாசம்

தமிழ்நாட்டு மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் கேரள மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கேரளாவில் பாமர மக்களுக்கு இருக்கின்ற பொது அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். 

நான் 1985 இல் பாலா சப் கலெக்டராக இருந்தபோது ஒருநாள் ஒருவர் என்னை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்று என் ஆபீசுக்கு வந்திருந்தார். நான் அவரை உள்ளே வரச் சொன்னேன். 

'என்ன விஷயம்?' என்று கேட்டேன். அவர் பதற்றத்தோடு விவரித்தார். "நான் தலையோலப்பறம்பு கிராமத்தில் இருந்து வருகிறேன். அங்கே ஒரு மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. அந்த ஊரில் விதவையே ஆகாத ஒரு பெண்ணுக்கு விதவைப்பென்ஷன் சாங்ஷன்  செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணோட பேரு தங்கம்மா" இப்படி அவர் சொன்னதும், நான் கேட்டேன் "நீங்க யாரு? உங்களுக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்?" என்று.

அவர் மிகவும் சாதாரணமாகச் சொன்னார் "அந்தத் தங்கம்மாவின் கணவரே நான்தான்" என்று. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

கணவர் உயிரோடு இருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று பொய் சொல்லி ஒரு பெண் விதவை பென்ஷன் வாங்குவது அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை இல்லையா? இது ,ஒரு சமூக நலத் திட்டத்தைக் கேலிப் பொருளாக்குவது இல்லையா? உடனே தாசில்தாரை வரவழைத்தேன். 

அவர்தான் விதவைப் பென்ஷன் சாங்ஷன் செய்த அதிகாரி. அவரும் பதறிப் போய் விட்டார். தலையோலப் பறம்பு வில்லேஜ் ஆபீசரின் விசாரணை ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் சாங்ஷன் செய்ததாக அவர் சொன்னார். 

தவறாக ரிப்போர்ட் கொடுத்த வில்லேஜ் ஆபீசரை உடனே சஸ்பெண்ட் செய்ய ஆணை பிறப்பித்தேன். ஒரு குறிப்பிட்ட தேதியில் புகார் செய்த கணவர், தங்கம்மா ,வில்லேஜ் ஆபீசர், தாசில்தார் அனைவரையும் வரச் சொன்னேன்.

விசாரணை

அந்தத் தேதியும் வந்தது .சம்பந்தப்பட்ட எல்லோரும் வந்திருந்தார்கள். அந்த தங்கமாவும் வந்திருந்தாள். குட்டு வெளிப்பட்டு விட்டதே என்ற குற்ற உணர்வோடு தொங்கிய முகத்துடன் வருவாள் என்று எதிர்பார்த்த எனக்கு அவள் தைரியமாக என் முன் வந்து நின்றது ஆச்சரியத்தைத் தந்தது.

தங்கம்மாவின் மீதுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையே   புகார் கொடுத்தவர் அவள் கணவரா? இல்லையா ?என்பதுதான். அதை முதலில் அறியவேண்டும் என்று தீர்மானித்த நான், அந்தப் பெண்மணியிடம் கேட்டேன் "இவர் உன் கணவர்தானே ?'' தங்கம்மா எந்த தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னாள் " ஆமாம்" .
நான் சற்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசத்தொடங்கினேன்."ஏம்மா நான் தமிழ்நாட்டில் இருந்து .வந்திருக்கிறேன் . எங்கள் கிராமத்தில் பெண்களிடம் அவர்களது புருஷன் பெயரைக் கேட்டால் நேரடியாகப்பதில் சொல்ல மாட்டார்கள். புருஷன் பெயர் முருகன் என்றால் ஜாடை மாடையாக  மயில் மேல இருக்கிறவர்னு சொல்வாங்க.அப்படிப்பட்ட ஊரில் இருந்து நான் வருகிறேன் .புருஷன் உயிரோடு இருக்கும் போது வெறும் 75 ரூபாய் கிடைக்கிறதுக்காக அவர் செத்துவிட்டார் என்று சொல்வதற்கு எப்படிம்மா மனசு வந்தது ?முதல்ல அதை எனக்கு விளக்குங்க!" உருக்கமாக நான் கேட்டேன் .

தங்கம்மா யாதொரு கலக்கமும் இன்றி என்னைக் கேட்டாள் "அரசாங்கம் ஏன் இந்த விதவைப் பென்ஷன் கொடுக்கிறது? விதவைன்னா  என்ன அர்த்தம்? நிராதரவான பெண் என்பதுதானே? நான் ஒரு நிராதரவான பெண்தான்" என்று சொல்லிச் சற்று நிறுத்திவிட்டு மேலும் தொடர்ந்தாள். 

"எப்படின்னு கேட்கிறீங்களா? 

இந்த ஆள் என்னை விட்டுவிட்டுப் போயி எட்டு வருஷம் ஆகுது கோழிக்கோட்டில் ஒரு பெண் கூட எட்டு வருஷமாக இந்தாள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எங்கள் ஊருக்கு வருவது கிடையாது. என் குழந்தைகளைப் பார்க்கிறது கிடையாது அதனால என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆளு செத்துப் போனவன் தானே?  நான் நிராதரவான பெண்தானே? சொல்லுங்க சார் சொல்லுங்க" தங்கம்மாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் ஆணித்தரமாக வெளிவந்தன.

புகார் கொடுத்த ஆள் அப்போது நெளிவதை  நான் கண்டேன். அதற்குப் பிறகு தங்கம்மாள் ஒரு கேள்வி கேட்டாள், என்னை நேரடியாகப் பார்த்து,"

 உங்கள் சட்டம் என்ன சொல்லுது? ஒருவன்  ஏழு வருஷம் காணாமல் போனால்அவனை செத்தவனாகக் கருதலாம்னு சொல்லுது .இல்லையா? அதனால சட்டப் பிரகாரம் இவன் எனக்குச் செத்துப் போனவன்தான்.நான் விதவை தான் சார்" என்று பேசி முடித்தாள்.

எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஒருவன் ஏழு வருஷம் காணாமல் போனால் அவனைச் செத்தவனாகச் கருதலாம் என்று எவிடென்ஸ் ஆக்ட்  சொல்கிறது .

அந்த சட்ட விதிகள் எல்லாம் தங்கம்மாவை எப்படியோ சென்றடைந்து இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி ஒரு சாமானியப் பெண்மணி சட்டவிதிகளைச் சொல்லி புருஷன் உயிரோடு இருக்கும் போதே அவன் செத்ததற்குச் சமம் என்று வாதிட்டு இருக்க முடியுமா ?

தங்கம்மாவின் வாதம் எனக்கு நியாயமாகப் பட்டது. ஆனால் அப்போதுள்ள பென்ஷன் விதிகளின்படி நான் தீர்ப்பு எழுதினால் அது தங்கம்மாவுக்குச் சாதகமாக அமையாது. அவளது விதவை பென்ஷனை நான் ரத்து செய்தாக வேண்டும்.
அது மனிதாபிமானத்துக்கு எதிராக இருக்கும் என்று நான் உணர்ந்தேன். எனவே பென்ஷன் விதிகளில் மாற்றம் செய்ய அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன என்று தோன்றியது.

தங்கம்மாவின் சூழ்நிலையை விவரித்து விட்டு "இவரைப் போன்ற பெண்களுக்கு ஆதரவு கொடுத்தால் தான் விதவைப் பென்ஷன் ஏற்படுத்தியதன் உண்மையான பலன் கிடைக்கும். அதற்கு விதவைப் பென்ஷனுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். யாரெல்லாம் விதவையாகக் கருதப்பட வேண்டும் என்கிற விதிமுறைகளில் ஒரு பெண்ணின் கணவன் ஏழு வருடங்களுக்கு மேல் காணாமல் போயிருந்தால் அந்தப் பெண்ணும் விதவையாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் சேர்த்து தங்கம்மாவைப் போன்ற நிராதரவான பெண்களுக்கும் விதவைப்பென்ஷன் அனுமதிக்கப்பட வேண்டும்" என்று அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினேன்.

கேரள அரசாங்கத்தின் சிறப்பு என்னவென்றால் இதுபோன்ற மனிதாபிமான விஷயங்களில் அனுகூலமான முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதுதான். என் கோரிக்கை ஏற்கப்பட்டு விதவைப் பென்ஷன் விதிமுறைகளில் மாற்றத்தை அரசாங்கம் அறிவித்தது.

அரசாங்கம் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தங்கம்மாவுக்கு பென்ஷன் தொடர்ந்து அளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் தங்கம்மா போன்று நிராதரவான  நிலைக்குத் தள்ளப்படும் பெண்களுக்கும் விதவை பென்ஷன் உறுதி செய்யப்பட்டதுதான் எனக்கு மனநிறைவைத் தந்தது.

அதிகாரியாகப் பணிபுரியும் போது நம் முயற்சியால் ஆதரவற்றவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமானால் அதை விட நமக்கு மகிழ்ச்சி அளிப்பது  வேறு இருக்க முடியாது. கண்ணகி தன் கணவன் கோவலன் கொல்லப்பட்ட போது கையில் சிலம்புடன் வந்து பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டாள்.

தலையோலப் பறம்பு தங்கம்மா கணவன் உயிரோடு இருக்கும்போதே அவனைச் இறந்தவனாக ஏன் கருதக் கூடாது என்று அரசாங்கத்திடம் நீதி கேட்டாள். அந்த தலையோலப் பறம்பு தங்கம்மாவை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது!

முக்கிய குறிப்பு
இதில் கொடுக்கப்பட்ட தமிழக அரசின் வலைதளத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...